பகல் வெளிச்சத்தில் அபார அழகாய்த் தெரிந்த ஒவ்வொன்றும் இப்போது பிசாசு பிசாசாக என்னைச் சுற்றி நிற்பதாகத் தோன்றியது. ராத்திரி நேரத்தின் ரீங்காரம் எட்டு திக்கிலிருந்தும் வந்துகொண்டிருந்தது. ஆந்தை ஒன்று எங்கிருந்தோ ழ்ழ்க், ழ்ழ்க் என்று குரல் கொடுத்தது. படபடவென்ற சத்தத்துடன் வௌவால்கள் பறந்துபோயின. பயம் காட்டும் சினிமாவின் ரீரெக்கார்டிங் போல, எத்தனைவித ஒலிகள் என்னை பயமுறுத்த? என்னவாக இருந்தாலும் சரி, இந்தக் காட்டுப் பகுதியை உடனே தாண்டியாக வேண்டும்.. உடனே.. டார்ச்சை எடுத்துக்கொண்டு, அது காட்டிய வெளிச்சத்தைத் தொடர்ந்தேன். ஒற்றைப் பாதையில் வேகமாக ஓடினேன். சில மீட்டர்கள் ஓடியிருப்பேன். செடிகளில் சரசர என்று ஓர் அசைவு. ர்ர்ற்ற்ர்ர்ற்ற்.. ப்ஹ்ர்ர்ஹ்ர்ர்ஹ்ர்ர்.. என்று என்னென்னவோ ஒலிகள் நான்கு புறமும் என்னை சூழ்ந்துவிட்டன.. நகராமல் ஆணியடித்தாற்போல் நின்றேன். கண்களைச் சுழலவிட்டேன். ஈயின் சிறகுகளைப்போல இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. பதறிப் பார்த்தேன். உறைந்தேன்.
நாய்கள், அதே வேட்டை நாய்கள். பிரவுன் நிற உடம்புடன், உக்கிரமான பார்வைகளுடன், பாய்வதற்குத் தயாரான கால்களுடன் என் கழுத்தைக் காதலுடன் பார்த்தன. ஆசை ஆசையாகக் காதலியைச் சந்திக்கச் சென்ற இடத்தில் இப்படி நீங்கள் சிறைப்பட்டு மாட்டியிருக்கிறீர்களா? என்னுடைய திடுக் திடுக் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தக் கதை..