சிறை மைதானத்தில் இருளை விரட்டும் பிரகாசமான வெள்ள விளக்குகள். சொல்லி வைத்ததுபோல் அத்தனை விளக்குகளும் திடீரென்று அணைந்தன. மின் தடங்கல். வேண்டுமென்றே செய்யப்பட்ட மின் தடங்கல். பலராம் நுனி விரல்களால் மைதானத்தின் முரட்டுப் புல்வெளியில் ஓடினான். அவனுக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு அவன் ஓடி முடித்ததும் உயரமான சுவர் எதிர்ப்பட்டது. இருட்டில் துழாவினான். நூலேணி தட்டுப்பட்டது. எத்தனை முன்னேற்பாடுகள் நூலேணி பிடித்துப் பரபரவென்று ஏறினான். நான்காவது படியில் காலைத் தப்பாக வைத்து, அது அவனைப் புரட்டிவிட்டதில் தலைமோதியது.
கருங்கல் சுவரில் மோதியிருந்தான். விண்ணென்று புடைத்து வலித்தது கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தலை மோதிய சத்தம் யாருக்காவது கேட்டிருக்குமா என்ற அச்சம்தான் பிரதானமாக இருந்தது. வலியைப் பொருட்படுத்தாமல் மேலே மேலே மேலே என்று ஏறலானான். தீடீரென்று விளக்குகள் விழித்துக்கொண்டபோது, அவன் சுவரின் உச்சியை அடைந்துவிட்டிருந்தான். நூலேணியை உருவி மறுபுறம் போட்டான். அதைப் பிடித்துத் தொங்கி அதன் ஆதாரத்தில் அப்படியே மறுபுறம் கீழே குதித்தான். சிறையிலிருந்து தப்பித்துவிட்டதாக அவன் பெருமிதம்கொள்ள..
உண்மையில் அவன் தப்பித்தானா, அல்லது ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்துள் நுழைந்தானா..? எதிர்பாராத திருப்பங்களுடன் சுபாவின் பரபர நடையில் 'எனது ராஜசபையிலே!'